/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவலம்
/
டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவலம்
டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவலம்
டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவலம்
ADDED : டிச 27, 2024 06:38 AM

பண்ருட்டி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால்,நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில், பண்ருட்டி தாலுகா தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, எலும்பு, கண், பல் மருத்துவம், தோல் சிகிச்சை, டயாளிசஸ் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை செயல்படுகிறது.
மருத்துவமனைக்கு பண்ருட்டி மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த 80 கிராம மக்கள் சிகிச்சைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனால், கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மருத்துவமனையில் 20 டாக்டர் பணியிடம் உள்ளிட்ட 90 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், 5 டாக்டர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 15 டாக்டர்கள் பணியிடம் கடந்த 6 மாதத்திற்கு மேலாக காலியாக உள்ளது. இந்த மருத்துவமனையின் கீழ் பண்ருட்டி நகர ஆரம்ப சுகாதார நிலையம், காடாம்புலியூர், மருங்கூர், ஒறையூர், வீரப்பெருமாநல்லுார், மணம்தவிழ்ந்தபுத்துார் துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகிறது.
ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் தினந்தோறும் சிகிச்சை எடுக்கும் நோயாளிகள், பண்ருட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிபாரிசு செய்கின்றனர். ஆனால், அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாமல், கடலுார் தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
குறிப்பாக, மகப்பேறு சிகிச்சை கிடைக்காமல், கடலுார் தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதுபோல் அவசர சிகிச்சை மற்றும் விபத்து பிரிவில் புறநோயாளிகள் பார்வை நேரத்தில் கூட சிகிச்சை பெற முடியாத நிலையில் நீண்ட நேரம் காத்துக்கிடக்க வேண்டிய நியைலில், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைகளை தேடி செல்லும் நிலை உள்ளது.
மருத்துவமனையில் இருக்கின்ற ஒன்றிரண்டு டாக்டர்கள் பணிச்சுமையால் எரிச்சலடைகின்றனர். நோயாளிகளை கடலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற பரித்துறை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
மேலும் டயாலிசஸ் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை, கண் சிகிச்சை, பொது மருத்துவம், தோல் சிகிச்சை, பல் மருத்துவ சிகிச்சை, சர்க்கரை நோய் உள்ளிட்டவைக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் கூறுகையில், பண்ருட்டி அரசு மருத்துவனைக்கு வரும் நோயாளிகளை கவனிக்க டாக்டர்கள் இல்லை. மற்ற வசதிகள் இருந்தும் டாக்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்ல முடியாமல் கடலுார், புதுச்சேரி செல்லவேண்டி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும். இல்லையெனில் தற்காலிகமாக டாக்டர்கள் நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.