/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரைபுரண்டோடும் பெண்ணையாற்று வெள்ளம் கடலுார்-புதுச்சேரி போக்குவரத்து துண்டிப்பு

ADDED : டிச 03, 2024 06:07 AM

கடலுார்: கடலுார் அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடலுார் - புதுச்சேரி சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
'பெஞ்சல்' புயல் காரணமாக கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் மாலை முதல் நீர்வரத்து அதிகரித்தது.
சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில், நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, நள்ளிரவு 12:45 மணியளவில் ஒரு லட்சத்து 6000 கன அடி, அதிகாலை 2:45 மணிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கடலுாரில் ஆற்றின் கரையோரம் உள்ள குண்டுசாலை, கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, சின்ன கங்கணாங்குப்பம் உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து, வெள்ளக்காடாய் மாறியது.
கடலுார் - புதுச்சேரி சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனங்களை மறித்து மாற்று வழியில் அனுப்பினர்.