ADDED : டிச 04, 2025 05:23 AM

வேப்பூர்: கனமழையால் அரசு கட்டடங்கள், கோவில்களில் தண்ணீர் சூழ்ந்து, சாலையோரத்தில் மரங்கள் சாய்ந்தன.
வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை 4:00 மணி வரை கனமழை பெய்தது. இதனால், நீர்வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் அதிகரித்ததால் ஏரிகள், குளங்கள் நிரம்பின.
வேப்பூர், பெரியநெசலுார், விளம்பாவூர், நல்லுார், காட்டுமயிலுார், கீழக்குறிச்சி, மாளிகைமேடு உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள, மக்காச்சோளம், வரகு, நெற்பயிர்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
வேப்பூர் தாலுகா அலுவலகம், பயணியர் பங்களா, அய்யப்பன் மற்றும் ஓம் சக்தி கோவில்களில் தண்ணீர் சூழ்ந்ததால் பக்தர்கள் கோவில்களுக்கு செல்வதில் சிரமமடைந்தனர். மேலும், சேலம்-கடலுார் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, காட்டுமயிலுார் வனப்பகுதியிலுள்ள புளிய மரங்கள் சாய்ந்தன.
இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

