/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாமியார்பேட்டை பீச்சிற்கு செல்ல மக்கள் அச்சம்
/
சாமியார்பேட்டை பீச்சிற்கு செல்ல மக்கள் அச்சம்
ADDED : ஜன 22, 2025 09:26 AM
குடிபிரியர்கள் தொல்லை அதிகரிப்பு
சாமியார்பேட்டை பீச்சிற்கு செல்ல மக்கள் அச்சம்
சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் நடராஜர் கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் உள்ளது. உள்ளூர் பகுதி மக்களின் முக்கிய பொழுது போக்கு இடமாக புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை பீச் சுற்றுலா பகுதியாக விளங்கி வருகிறது.
இங்கு சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்து விடுமுறை நாட்களை உல்லாசமாக கழித்து செல்கின்றனர்.
அதேபோல் பெரியகுப்பம் கடற்கரை பகுதிக்கும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொழுதுபோக்கிற்கு அதிகம் வருகின்றனர். அதற்கேற்ப அரசு சார்பில், அங்கு பொதுமக்கள் அமர்வதற்கும், விளையாடுவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மீனவ கிராமத்தையொட்டிய அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாகவும் இருந்து வருகிறது. அதே சமயத்தில் சமீப காலமாக வெளியூரில் இருந்து வரும் வாலிபர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவது போதை தலைக்கேறியதும் கடலில் குளித்து கும்மாளமிடுவது அதிகரித்துள்ளது. இதனால், அங்கு குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பெரியக்குப்பம் கடற்கரையில், கடந்த மாதம் 25 ம் தேதி, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தபோது, போதையில் வாலிபர்கள் சிலர், பெண்களிடம் தகராறு செய்து தாக்கினர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுத்து 4 வாலிபர்களை கைது செய்தனர்.
ஆனாலும், இச்சம்பவத்தை தொடர்ந்து, பெரியக்குப்பம், சாமியார்பேட்டை கடற்கரை பகுதிக்கு வெளியூரில் இருந்து பொதுமக்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
இதனால், விடுமுறை தினங்களில் பிசியாக காணப்படும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
எனவே, கடற்கரை பகுதிகளில் மது அருந்துவதை தடுக்கவும், அங்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கடற்கரை பகுதிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தவும், விடுமுறை தினங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.