/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு! சுகாதார சீர்கேட்டால் கடும் அவதி
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு! சுகாதார சீர்கேட்டால் கடும் அவதி
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு! சுகாதார சீர்கேட்டால் கடும் அவதி
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு! சுகாதார சீர்கேட்டால் கடும் அவதி
ADDED : மார் 04, 2025 07:10 AM
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை பேரூராட்சியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக மாறியுள்ளதால்,சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு, பேரூராட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலகம், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், வங்கிகள், அரசு மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பில்லுார், கோவிலானுார், பள்ளிப்பட்டு, கோணாங்குப்பம், ரூபநாராயணநல்லுார், காட்டுப்பரூர், எடச்சித்துார் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கு வந்து செல்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வடிகால் வழியாக கோவிலானுார் ஊராட்சி செல்லும் வழியில் உள்ள குட்டையில் தேக்கி வைக்கப்பட்டது. நாளடைவில் குட்டையை சீரமைத்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் வகையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
பின்னர், கழிவுநீரை வடிகால் வழியாக அருகிலுள்ள ஊராட்சிகளான கோவிலானுார், சித்தேரி மற்றும் பள்ளிப்பட்டு ஏரியில் விடப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதுடன் பொது மக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைக் கண்டித்து, கோவிலானுார், பள்ளிப்பட்டு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
அப்போதைய விருத்தாசலம் ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தை நடத்தி, பேரூராட்சி எல்லையில் குட்டை அமைத்து, அதில் தற்காலிகமாக கழிவுநீரை தேக்கவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் அறிவுறுத்தினார்.ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை.
இதனால் கோவிலானுார் கிராம சாலையோரம் மற்றும் விருத்தாசலம் செல்லும் சாலையோரம் கழிவுநீர் குளம்போல தேங்கி, கருப்பு நிறத்தில் மினி கூவமாக காட்சியளிக்கிறது. நாய்கள், பன்றிகள் உலவுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பல அடி உயரத்திற்கு கோரை புற்கள் வளர்ந்து, விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியுள்ளது. ஆங்காங்கே வடிகாலில் அடைப்பு காரணமாக கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி, பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் கொசுக்கள் பெருக்கமடைந்து, இரவில் மக்கள் நிம்மதியாக துாங்க முடியாமல் சிரமமடைகின்றனர்.
எனவே, மங்கலம்பேட்டை பேரூராட்சி மக்கள் நலன் கருதி எம்.எல்.ஏ., - எம்.பி., தொகுதி நிதியை பெற்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.