/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சரிடம் மக்கள் வாக்குவாதம்; கவுன்சிலரை கண்டித்து மறியல்
/
அமைச்சரிடம் மக்கள் வாக்குவாதம்; கவுன்சிலரை கண்டித்து மறியல்
அமைச்சரிடம் மக்கள் வாக்குவாதம்; கவுன்சிலரை கண்டித்து மறியல்
அமைச்சரிடம் மக்கள் வாக்குவாதம்; கவுன்சிலரை கண்டித்து மறியல்
ADDED : டிச 05, 2024 07:02 AM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட அமைச்சர் கணேசன் நேற்று சென்றார். அப்பகுதி மக்கள், அமைச்சரை சூழ்ந்து, வாய்க்கால் சரி இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதாக புகார் கூறினர்.
மாவட்ட பிரதிநிதி கதிரேசன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
பொதுமக்கள், 'எங்களை பார்க்க வந்த அமைச்சரிடம் குறைகளை சொல்கிறோம். அதை கேட்க நீங்கள் யார்' என தி.மு.க.,வினரிடம் வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களை அமைச்சர் கணேசன் சமாதானம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
நெல்லிக்குப்பம் நகராட்சி 3வது வார்டு திடீர்குப்பம் மக்கள், அமைச்சர் கணேசனிடம், பல ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க கோரினர். அவர்களை கவுன்சிலர் ஜெயபிரபா தடுக்க முயலவே, இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், தரக்குறைவாக பேசிய கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷன் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறியலால் கடலுார் -பண்ருட்டி சாலையில் மாலை 3:00 மணி முதல் 3:40 வரை போக்குவரத்து பாதித்தது.
பண்ருட்டி:
வெள்ளப்பாதிப்பு காரணமாக பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி, காமாட்சிபேட்டையில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட கிராம மக்கள் 100 பேர் நேற்று காலை 10:00 மணிக்கு, பண்ருட்டி- உளுந்துார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதை ஏற்று 10:30 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
பொன்னங்குப்பம்:
பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சி பொன்னங்குப்பம் கிராமத்தில் தேங்கிய மழை நீரை நேற்று முன்தினம் பொக்லைன் மூலம் அகற்றியபோது, குடிநீர் குழாய் உடைந்தது.
அதனை சரி செய்யாததால் நேற்று காலை குடிநீர் வழங்கவில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலை 8:00 மணிக்கு புதுப்பேட்டை- அரசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை ஏற்று 8:15 மணிக்கு கலைந்து சென்றனர்.