கிடப்பில் மேம்பாலம் கட்டும் பணிவிரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
கிடப்பில் மேம்பாலம் கட்டும் பணிவிரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 16, 2026 07:53 PM

பெண்ணாடம், ஆக. 17–
தாழநல்லுாரில் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டுமான பணியை விரைந்து துவக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் – நரசிங்கமங்கலம் தரைப்பாலத்தை பயன்படுத்தி தாழநல்லுார், நரசிங்கமங்கலம், கோனுார், தீவளூர், எரப்பாவூர், கோவிலுார் உட்பட இருபகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், நல்லுார், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் கோடை மழையின்போது ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் இவ்வழியே செல்லும் இருபகுதி மக்களும் 10 முதல் 15 கி.மீ., துாரம் சற்றி பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம்,வேப்பூர் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் இருபகுதி மக்கள் கடும் அவதியைடைந்தனர்.
இந்த பாதிப்பை போக்க தாழநல்லுார் பெரிய ஓடையின் குறுக்கே மேம்பாலம் கட்டக்கோரி, இருபகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, கடந்தாண்டு நபார்டு மற்றும் கிராம மாநில நிதி திட்டத்தில் 5 கோடியே 72 லட்சத்தில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதே ஆண்டில் பணிகளும் துவங்கியது.
ஆனால், தரைப்பகுதியில் கான்கிரீட் அமைத்த நிலையில் 4 மாதங்களுக்கு மேலாக இதுவரை பணியை துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழைக்கு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் பாதிப்படைவது தொடரும் நிலை உள்ளது.
எனவே, கிடப்பில் போடப்பட்ட தாழநல்லுார் – நரசிங்கமங்கலம் மேம்பாலம் பணியை விரைந்து துவக்க வேண்டும் என இருபகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
