ADDED : ஏப் 21, 2025 06:08 AM

கடலுார் : கடலுாரில் வெயிலின் தாக்கத்தை தணிக்க, சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வுநிலை திசை மாறியதால் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக கடலுார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 12ம் தேதி கடலுார் மாவட்டத்தில் வெப்பநிலை 102.56 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.
இதன் காரணமாக பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் கடும் அவதியடைந்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலுார் சில்வர் பீச்சில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பொழுதை கழித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

