/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் கடலுாரில் அமைக்க வீரர்கள் எதிர்பார்ப்பு
/
ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் கடலுாரில் அமைக்க வீரர்கள் எதிர்பார்ப்பு
ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் கடலுாரில் அமைக்க வீரர்கள் எதிர்பார்ப்பு
ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் கடலுாரில் அமைக்க வீரர்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 04, 2025 05:25 AM
கடலுார்: சர்வதேச போட்டிகளில் சாதிக்க கடலுாரில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் துப்பாக்கி சுடும் போட்டி, சாப்ட் டென்னிஸ், டெக்பால் மற்றும் தடகளம் என பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் சர்வதேச அளவில் பங்கேற்று வருகின்றனர்.
மேலும், அவர்கள் தங்கள் திறமையை மெருகேற்றி, சர்வதேச போட்டிகளில் சாதனை படைக்க கடலுாரில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.
விளையாட்டு அறிவியல் மையம் என்பது விளையாட்டு வீரர்களின் திறன்களை கண்டறியவும், அவரவர் உடல் திறனுக்கேற்ற மருத்துவ ஆலோசனைகள் வழங்கி திறனை மேம்படுத்த உதவும் மையமாகும். விளையாட்டு வீரர்களின் இதயத்துடிப்பு, உயரம் தாண்டுதல், ஓட்டத்திற்கான வேகம், தாவி குதித்தல் போன்ற பல்வேறு திறன்களை கண்டறியும் வகையில் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு அறிவியல் மற்றும் கல்வி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஓட்டப்பந்தய வீரர்களின் திறனை பரிசோதிக்கும் ஸ்பெக்ட் அனலைசர்; வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, நீளம், உயரம் தாண்டுதல் விளையாட்டுகளில் முக்கியமான தாவி குதிக்கும் திறனை பரிசோதிக்க போர்ஸ் பிளேட்; வீரர்களின் கை, கால் தசை, உடலின் பிற தசை இயக்கங்கள், தசைகளின் வலிமையை கண்டறிய கினோ மீட்டர்; வீரர்கள் ஓடும்போது இதயத்துடிப்பைக் கண்டறிய டிரெட் மில் போன்ற நவீன கருவிகள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து விளையாட்டு திறனை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது. விளையாட்டு அறிவியல் மையங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ளன.
இவற்றை கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் கட்டப்பட்டது.
எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு இக்கருவிகளை இயக்கி அவர்களின் செயல்பாடு கண்டறியப்பட்டு, திறனை மேம்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சியாளர்கள் கூறுகையில், 'சென்னை, மதுரை, ஊட்டி பகுதியில் விளையாட்டு அறிவியல் மையங்கள் இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர். இதேபோன்று, கடலுாரிலும் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

