/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
/
திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் மெத்தனம்
ADDED : மார் 10, 2024 06:19 AM

திண்டிவனம் திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கப் பணிகளில், திண்டிவனம் - செஞ்சி சாலையில் உள்ள சந்தைமேடு, அய்யந்தோப்பு வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையிலான 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை பணி முடிந்துள்ளது.
இதில், திண்டிவனம் சந்தைமேடு அருகே, அய்யந்தோப்பு கல்லுாரி சாலையில் ரவுண்டானா அமைத்துள்ள நிலையில், இரவு நேரத்தில் விபத்தை தவிர்க்க ஹைமாஸ் விளக்கு மற்றும் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படாமல் உள்ளது.
இந்த சாலை முறைப்படி பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காத நிலையில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து செஞ்சி மார்க்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தடையின்றி செல்கின்றன.
தற்போது இரு பக்கத்திலிருந்தும் வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் கண்டபடி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை, செஞ்சி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் சந்தைமேடு புறவழிச்சாலை வழியாக வந்து, சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே இடது புறமாக சலவாதி வழியாக சென்னை செல்ல வேண்டும்.
அதே போல் திருவண்ணாமலை, செஞ்சி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம், புதுச்சேரி செல்லும் வாகனங்கள் சலாவதி கிராமத்தில் 'யூ டர்ன்' செய்து, திண்டிவனத்திற்கு (மேம்பால பஸ் நிலையம்) வரவேண்டும்.
ஆனால், பல வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சலாவதி கிராமம் அருகே 'யூ டர்ன்' செய்யாமல், சந்தைமேடு புறவழிச்சாலை கடைசியில் உள்ள சென்னை செல்லும் சாலையில் வலது புறமாக திரும்பி, எதிர்புறம் வாகனங்கள் வரும் என்பதை கூட கவனிக்காமல் திண்டிவனம் நோக்கி வருகின்றனர். வாகனங்கள் எதிரும், புதிருமாக வருவதால் விபத்து அபாயம் உருவாகி உள்ளது.
இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறி வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வீதிமீறல் தொடர்கிறது.
பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன் சென்னை சாலையையொட்டியுள்ள சந்தைமேடு புறவழிச்சாலை பகுதியில் திண்டிவனம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

