ADDED : செப் 26, 2026 09:53 PM

கடலுார்: கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்தில், மஞ்சை நகர் திறந்த வெளி மைதானம் மீட்பு குழுவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாநகராட்சி சார்பில் 14.15 கோடி ரூபாய் மதிப்பில் மைதானத்தில் புதிய கடைகள் கட்டுமான பணி நடக்கிறது.
கோர்ட் உத்தரவை மீறி பணிகள் நடப்பதாகவும், அதனால் கட்டுமான பணிக்கு தடை விதிக்கவும், வலியுறுத்தி மஞ்சை நகர் திறந்த வெளி மைதானம் மீட்பு குழுவினர் மக்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதற்கு புதுநகர் போலீசார், அனுமதி மறுத்தனர்.
இருப்பினும் நேற்று மாலை 4:00 மணிக்கு மைதானத்தில் மஞ்சை நகர் திறந்த வெளி மீட்பு குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதில், அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று, கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி புதுநகர் போலீசார், இரவு 8:00 மணிக்கு மைக்குகளை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த இக்குழுவினர், புதுநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. டி.எஸ்.பி., தமிழ் இனியன் சமாதானம் செய்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
