/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசார் பேச்சுவார்த்தை போராட்டம் வாபஸ்
/
போலீசார் பேச்சுவார்த்தை போராட்டம் வாபஸ்
ADDED : ஏப் 18, 2025 05:02 AM

கடலுார்: கடலுார் ஆர்.டி.ஓ.,அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் அறிவித்த இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர், போலீசார் சமாதானத்தையேற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்த 42 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று வந்தனர்.
மாவட்ட பொருளாளர் காசிநாதன் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி போலீசார் சமாதானம் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் நடந்த பேச்சவார்த்தையில் பங்கேற்றனர்.
அதில், ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கலெக்டருக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என ஆர்.டி.ஓ., கூறினார்.
ஆனால், 2019ல் அறிவிக்கப்பட்ட 42 பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த நபர்களின் பட்டியலைப் பெற்று, கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி அளித்ததையேற்று கலைந்து சென்றனர்.

