/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களைகட்டியது: ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்
/
கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களைகட்டியது: ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களைகட்டியது: ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களைகட்டியது: ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2024 04:35 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடற்கரை, சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடி, காணும் பொங்கல் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 2ம் நாளான நேற்று முன்தினம் மாட்டுப் பொங்கலான உழவர் திருநாளும், நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காணும் பொங்கல் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.
இந்நாளில், உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். காணும் பொங்கலையொட்டி, முதல் நாள் இரவு கண்விழித்து பெண்கள் வீடுகளில் அரிசி மாவில் கோலமிட்டு மகிழ்வர். கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் நடத்தப்படும்.
அந்த வகையில், காணும் பொங்கல் நேற்று கடலுார் மாவட்டம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கடலுார் சில்வர் பீச்சில் சுற்றுப்பகுதியில் இருந்து பொதுமக்கள், குழந்தைகள் என, குடும்பத்துடன் குவிந்தனர்.
அங்கு உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பொதுமக்கள் கண்டு களிக்க பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
அதேபோல், கடலுார் முதுநகர் சோனங்குப்பம் மீனவர் கிராமத்தில் ஆண்களுக்கான படகுப்போட்டி, நீச்சல்போட்டி, பெண்களுக்கான கயிறு இழுக்கும்போட்டி நடந்தது.
சிதம்பரம்
சிதம்பரம் நடராஜர் கோவில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், கிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் கூடினர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், ஆயிரங்கால் மண்டபம் முன்பு சிறுவர்கள் சிலம்பம், கபடி, கோ-கோ, மல்லர் கம்பம் ஏறுதல், இளைஞர்கள் இளவட்ட கல் தூக்குதல் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.
பெண்கள், சிறுமிகள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர்.
இதனை கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
இதே போன்று, புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை கடற்கரை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் காணும்பொங்கல் விழா நேற்று களைகட்டியது.
டி.ஐ.ஜி., திடீர் வருகை
கடலுார் மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடலுார் சில்வர் பீச்சில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியது. எஸ்.பி., ராஜாராம் மேற்பார்வையில் நுாற்றுக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜியாக பொறுப்பேற்றுள்ள திஷா மிட்டல், நேற்று மாலை திடீரென சில்வர் பீச்சிற்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.