/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளம்: கடலுார் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம்
/
தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளம்: கடலுார் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம்
தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளம்: கடலுார் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம்
தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளம்: கடலுார் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : மே 17, 2024 11:04 PM
நெல்லிக்குப்பம் : அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கடலுார் மாவட்டத்தில் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.
சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் ஆலைகளை மூடவும் உத்தரவிடப்பட்டது. ஆனாலும் முழுமையாக தடை செய்யப்படாத நிலையே உள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து, தமிழக அரசு விதிகளை திருத்தி அரசாணை வெளியிட்டது. அதில், நகராட்சி கமிஷனர் செயலாக்க அதிகாரியாக இருந்து கண்காணிக்க வேண்டும். துப்புரவு ஆய்வாளர், அலுவலர் ஆகியோர் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும். சம்பவ இடத்திலேயே அபராதம் விதித்தல், பொருட்களை பறிமுதல் செய்தல், வியாபார நிறுவன உரிமம் ரத்து செய்தல் போன்ற தண்டனைகளை வழங்க அதிகாரம் அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரிய வணிக நிறுவனங்களுக்கு முதல் முறை பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறியப்பட்டதால், 25 ஆயிரம் அபராதம், இரண்டாம் முறை 50 ஆயிரம், மூன்றாம் முறை 1 லட்சம் ரூபாய் விதிக்கவும், சிறிய நிறுவனங்களுக்கு முறையே 10 ஆயிரம், 15 ஆயிரம், 25 ஆயிரம் என அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டது. மூன்று முறைகளுக்கு மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறிந்தால் வியாபார நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை கடுமையாக பின்பற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். மேலும், கடந்த 6 ம் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு தடை விதிப்பதாகவும், அதையும் மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வையுங்கள் எனவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதையடுத்து, கடலுார் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், தடை உத்தரவு அரசாணை நகலை, வர்த்தகர்களுக்கு வழங்கி கையெழுத்து பெற்றனர். ஆனாலும், மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.
ஐந்து ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் கூட அதை பிளாஸ்டிக் பையில் போட்டு தரும் அளவுக்கு வர்த்தகர்களும் பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுகின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதிகாரிகள், பெயரளவுக்கு சில கடைகளில் சோதனை என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகளை பிடிக்கின்றனரே தவிர, முழுமையாக கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

