/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலின தேர்வை தடை செய்தல் சட்ட விழிப்புணர்வு தீவிரம்! தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
/
பாலின தேர்வை தடை செய்தல் சட்ட விழிப்புணர்வு தீவிரம்! தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பாலின தேர்வை தடை செய்தல் சட்ட விழிப்புணர்வு தீவிரம்! தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பாலின தேர்வை தடை செய்தல் சட்ட விழிப்புணர்வு தீவிரம்! தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ADDED : நவ 06, 2024 11:17 PM

பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிவது குற்றமாகும். இருப்பினும் சட்டவிரோதமாக சில மருத்துவமனைகளில் பாலின தேர்வை ரகசியமாக சோதனை செய்வதால், பெண் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், முன்னாள் கலெக்டர் அருண் தம்புராஜ் பணிக்காலத்தில், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு, பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டன.
இந்நிலையில், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற முழகத்துடன், பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அதற்குரிய தண்டனையும் கடுமையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது, மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டுகின்றன. அதன்படி, மாவட்டத்தில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டு கடலுார், விருத்தாசலம் உட்பட 14 ஒன்றிய அலுவலக முகப்புகளிலும் விழிப்புணர்வு போர்டு வைக்கும் பணி நடந்து வருகிறது.
அதில், 'பிறக்கும் முன் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது குற்றச்செயலாகும்.
கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது மருத்துவரிடமோ அல்லது அங்கு பணிபுரியும் ஊழியரிடமோ கருவின் பாலினத்தை அறிய முயற்சி செய்வது குற்றச் செயலாகும்.
ஸ்கேன் செய்யும்போது கருவின் பாலினத்தை அறிய வலியுறுத்தும் கணவர் மற்றும் உறவினருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
ஸ்கேன் செய்யும்போது கருவின் பாலினத்தை அறிவிக்கும் மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், பி.சி., மற்றும் பி.என்.டி.டீ., சட்டப்பிரிவின் கீழ் அனைத்து குற்றமும் வழக்கு தொடரக்கூடியது.
ஜாமின் அற்றது மற்றும் சமரசமற்றது. இது தொடர்பான புகாருக்கு கலெக்டர், மாவட்ட இணை இயக்குனர் மற்றும் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரை, 04142 230052 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் ' என்ற, வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் பெண்களாய் பிறந்து, சாதனை புரிந்த ராணி வேலுநாச்சியார், அன்னை தெரசா, விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.