/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம். கிடப்பில்: மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை தேவை
/
மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம். கிடப்பில்: மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம். கிடப்பில்: மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம். கிடப்பில்: மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : மார் 01, 2024 12:24 AM

விருத்தாசலம்,: கடலுார் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீரை வீணாக்காமல் சேமிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் மழை நீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மழைநீர் வீணாக வெளியேறுவதை தடுக்க மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இதனால் மழைநீர் மண்ணுக்குள் நேரடியாக சென்றதால், நிலத்தடி நீர்மட்டம் சரிவடையாமல் பாதுகாக்கப்பட்டது.
நாளடைவில் இத்திட்டம் முக்கியத்துவத்தை உணராமல் கிடப்பில் போடப்பட்டது. மாடிகளில் இருந்து மழைநீர் வழிந்தோடும் வகையில் போடப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் உடைந்தும், தண்ணீர் சேமிக்கும் தொட்டிகள் துார்ந்தும் பயனற்ற வகையில் காட்சிப்பொருளாக மாறின. இதனால் மழைநீர் சாலைகளிலும், வடிகால் வழியாக ஆறுகளிலும் கலந்து கடலில் சென்று வீணாகி வருகிறது.
கடலுார் மாவட்டத்தை பொருத்தவரையில், நகர்ப்புற குடியிருப்புகளில் போர் வெல்கள் செயலிழந்து வருகின்றன. 400 அடி ஆழத்தில் கிடைத்து வந்த தண்ணீர், 800 முதல் 900 அடிக்கு கீழே சென்று விட்டது. இதனால் 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் செலவழித்து, பல அடி ஆழத்திற்கு போர்வெல் போடும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நின்றால் மட்டுமே நீர்மட்டம் உயரும் நிலையில், ஆறுகள் வறண்டு கிடப்பதால் குடி நீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளும் தண்ணீருக்கு தவிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, கடலுார் மாவட்டத்தில் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக அரசு அலுவலகங்கள், அரசு பள்ளி, கல்லுாரிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பழுதடைந்த குழாய்கள், தொட்டிகளை புனரமைக்க வேண்டும். பொது மக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதுபோல், புதிதாக கட்டப்படும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
குடியிருப்புகள், அரசு அலுவலகங்களில் மழைநீரை சேமிப்பதால், போர்வெல்கள் செயலிழப்பது தவிர்க்கப்படும்.

