ADDED : மார் 30, 2025 04:42 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி பகுதியில் சூறைக்காற்றில் சேதமான வாழை விவசாயிகளுக்கு 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி நிவாரணம் வழங்கப்பட்டது.
குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு, சமட்டிக்குப்பம், புலியூர், உள்ளிட்ட பல கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் கடந்தாண்டு ஜூன் 4ம் தேதி, சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்ததால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன.
ஏக்கர் ஒன்றுக்கு வாழை பயிரிட, 1:50 லட்சம் வரை செலவு செய்து பயிரிட்ட நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மொத்தம் 72.45 ஏக்கரில், 167 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
ஆனால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் இருந்தது. 'பெஞ்சல்' புயலில் நெல், மணிலா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிது போல் தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென, வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான நிலையில், நேற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் எக்டர் ஒன்றுக்கு 17,500 ரூபாய் நிவாரண தொகையாக வரவு வைக்கும் பணி துவங்கியது.