/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பூ மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கடலுார் பூ மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : பிப் 08, 2025 12:27 AM

கடலுார்: கடலுார் பூ மார்க்கெட்டில், ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக அகற்றியதால், மார்க்கெட் விசாலமாக காணப்பட்டது.
கடலுார், பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் இன்று விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த மார்க்கெட்டில் 20 அடி சாலை இருந்த போதிலும், இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை விரிவாக்கம் செய்து கொண்டதால் சாலை 5 அடி அளவிற்கு சுருங்கியதால், மக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்த புகாரைத் தொடர்ந்து பூ மார்க்கெட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த 5ம் தேதி மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அப்போது வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்வதாக கூறி 3 நாட்கள் அவகாசம் கேட்டனர்.
அதிகாரிகள், ஒரு நாள் அவகாசம் வழங்கிய நிலையில், வியாபாரிகள் கூறியபடி ஆக்கிரமிப்பு ெஷட்களை முழுமையாக அகற்றாமல் இருந்தனர். நேற்று முன்தினம் போலீசார் எச்சரித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் பூ மார்க்கெட்டை பார்வையிட்டனர். வியாபாரிகள் கூறியபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததை தொடர்ந்து, அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர்.
நாங்கள் கேட்ட காலக்கெடு முடிவதற்குள் ஏன் கடைகளை அகற்றுகிறீர்கள் எனக் கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பூ மார்க்கெட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர். இதனால், பூ மார்க்கெட் நேற்று விசாலமாக காணப்பட்டது.
இதனைக் கண்ட பொதுமக்கள், மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும். மாதத்திற்கு ஒருமுறையேனும் மார்க்கெட்டை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.