/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் புதுப்பிக்கப்பட்ட டவுன்ஹால் திறப்பு
/
கடலுாரில் புதுப்பிக்கப்பட்ட டவுன்ஹால் திறப்பு
ADDED : செப் 19, 2025 03:33 AM

நெய்வேலி: கடலுாரில், என்.எல்.சி., யின் சி.எஸ்.ஆர்., நிதி ரூ. 3.30 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட டவுன்ஹால் நேற்று திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றினார். எம்.பி., விஷ்ணுபிரசாத், கலெக்டர் சிபி அதித்யா செந்தில்குமார், என்.எல். சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, சுரங்க செயல் இயக்குநர் ஜாஸ்பர்ரோஸ் பங்கேற்றனர்.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி குத்துவிளக்கேற்றி பேசுகையில், 'என்.எல்.சி., நிறுவனம் மாவட்ட வளர்ச்சிக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. என்.எல்.சி., யின் சி.எஸ்.ஆர்., நிதியில் 70 சதவீதம் இந்த மாவட்டத்திற்கு செலவிடப்படுகிறது.
இதுவரை 380 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மேலும் 46 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. டவுன்ஹால் என்பது ஒரு கட்டடம் மட்டுமல்ல. இது பாரம்பரிய செல்வமாகும்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் கடலுார் மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் செயல்படுகிறது. தண்ணீர் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வள்ளலார் ஏரி, செங்கால் ஓடை, மத்திய பரவாணர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டட நீர்நிலைகள் புணரமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.70 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது' என்றார்.
விழாவில், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.