ADDED : நவ 23, 2025 06:20 AM

சேத்தியாத்தோப்பு: நவ. 23-: சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் நான்குமுனை சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல், ரவுண்டானா அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை-கும்பகோணம் சாலை, சேத்தியாத்தோப்பு-சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சாலை என நான்குமுனை சந்திப்பு உள்ளது.
இந்த சந்திப்பில் போக்குவரத்து ரவுண்டானா இல்லாததால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
சென்னை, கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் கடக்கும்போது விபத்திற்குள்ளாகின்றனர்.வாகனங்கள் பிரிந்து செல்லும் வகையில் ரவுண்டானா இல்லாததால் எதிரே மற்றும் பக்கவாட்டில் கடக்கும் வாகனங்கள் திக்குமுக்காடுகின்றன.
போதிய போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து ரவுண்டானா, போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

