ADDED : நவ 17, 2025 01:23 AM

பெண்ணாடம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதியருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி, பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில், நேற்று, மூத்த தம்பதியருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் மகாதேவி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 7 மூத்த தம்பதியர்கள் வரவழைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. மலர் மாலைகள், வேட்டி மற்றும் துண்டு, சேலை ஆகியவையும், மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, பூ மற்றும் கண்ணாடி, வளையல்கள், பழவகைகள் தட்டில் வைத்து கொடுக்கப்பட்டன.
தம்பதியர்கள் மூலவர் சன்னதி முன் மாலை மாற்றி, புதிய மஞ்சள் சரடு மற்றும் மலர்கள் அணிந்து வழிபட்டனர்.
கோவில் வளாகத்தில் இருந்தவர்கள், மூத்த தம்பதியரிடம் ஆசி பெற்றனர்.

