ADDED : நவ 26, 2025 07:28 AM

கடலுார்: கருவூல கணக்கு துறை சார்பாக ஓய்வூதிய நிலுவைகள் மற்றும் கருத்துருக்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடலுாரில் நடந்தது.
கருவூல கணக்கு துறையின் கூடுதல் இயக்குநர் சோபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தீபா ஆகியோர் தலைமை தாங்கினர்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை மூலம் அரசின் வரவு மற்றும் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு தற்போது சீரிய முறையில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் தற்போது அலுவலர்களுக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் தற்போதைய நடைமுறைகள் குறித்தும், மொபைல் ஆப் பயன்பாடுகள், ஓய்வூதியம் தொடர்பான வழிகாட்டுதல்கள், மின்னணு அனுமதி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தாண்டு வயது முதிர்வின் காரணமாக புதியதாக ஓய்வானவர்களுக்கு ஓய்வூதிய சலுகைகள் வழங்குதல் குறித்தும், ஓய்வூதிய நிலுவைகள் மற்றும் அது தொடர்பான கருத்துருக்களை உரிய காலத்திற்குள் கருவூலத்திற்கு அனுப்புதல் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பட்டியல் ஏற்பளிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. களஞ்சியம் 2.0 செயலி மூலம் அரசு பணியாளர்களை தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, விழாக்கால விடுப்பு போன்றவைகளை கட்டாயம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் பரணிதரன், கருவூல அலுவலர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

