/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் உற்பத்தி திறன் விருது விவசாயிகளுக்கு அழைப்பு
/
நெல் உற்பத்தி திறன் விருது விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 22, 2024 09:30 AM
ஸ்ரீமுஷ்ணம் : திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல் உற்பத்தி திறனுக்கான விருது பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல்உற்பத்தி திறனுக்கான விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு மற்றும் 7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் சொந்தம் அல்லது குத்தகையாக 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சன்ன ரக நெல் பயிர் செய்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக திருந்திய நெல் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும்.
பயிரிட்ட வயலில் குறைந்தபட்சம் 50 சென்ட் அளவில் பயிர் அறுவடைமேற்கொள்ளப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். மேற்கண்ட பயிர் விளைச்சல் போட்டியில் பங்குபெற விரும்பும் விவசாயிகள் ஸ்ரீமுஷ்ணம் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்புகொண்டு 150 ரூபாய் பதிவுக்கட்டணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நடப்பு சம்பா பருவத்தில் உள்ள விவசாயிகள் போட்டியில் பங்கேற்கலாம். சென்னை வேளாண்மை இயக்குனரின் தலைமையில் மாநில அளவிலான குழுவினர் மூலம் விருதுக்கு உரிய விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.