/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி சாலை மறியல்
/
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி சாலை மறியல்
ADDED : மார் 29, 2025 04:33 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் மயான ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.
மங்கலம்பேட்டையில், புல்லுார் இணைப்பு சாலையோரம் 2.64 ஏக்கரில் இந்துக்கள் பயன்படுத்தும் 2 மயானங்கள் உள்ளன. இதனைச் சுற்றிய பெரும்பகுதி ஆக்கிரமிப்பு காரணமாக பரப்பளவு குறைந்து, இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மயானத்திற்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கடந்த 18ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தை அனைத்துக் கட்சியினர் முற்றுகையிடும் போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மங்கலம்பேட்டை-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. முத்துவேல் தலைமையில் கவுன்சிலர் கோமதி, விஸ்வகர்மா கூட்டமைப்பு மாநில தலைவர் மணிகண்டன், கருணாகரன், செந்தில்கோபு, மணிகண்டன் உட்பட ஏராளமானோர் மறியல் செய்தனர்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி தலைமையிலான போலீசார் மற்றும் செயல் அலுவலர் மயில்வாகனன் ஆகியோர் சம்பவ இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.