/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர் மழையால் சாலைகள்... 'பஞ்சர்'விரைந்து சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
தொடர் மழையால் சாலைகள்... 'பஞ்சர்'விரைந்து சீரமைக்க மக்கள் கோரிக்கை
தொடர் மழையால் சாலைகள்... 'பஞ்சர்'விரைந்து சீரமைக்க மக்கள் கோரிக்கை
தொடர் மழையால் சாலைகள்... 'பஞ்சர்'விரைந்து சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : டிச 06, 2025 06:54 AM

கடலுார் : மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் பல இடங்களில் சாலைகளில், ஜல்லிகள் பெயர்ந்து 'பல்லாங்குழி'களாக மாறிவிட்டன. இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த 2 மாதங்களாக பெய்து வருகிறது. சமீபத்தில்,'டிட்வா' புயல் சின்னம் காரணமாக கடலுார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 1200 மி.மீட்டர் ஆகும். அதில் வட கிழக்கு காற்றின் மூலம், 790 மி,மீ., மழை பெய்ய வேண்டும்.
அக்டோபரில் 220 மி.மீட்டருக்கு கூடுதலாக 280.1மி.மீட்டரும், நவம்பர் மாதத்தில் 295 மி.மீட்டருக்கு 282 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மழைக்காலம் நெருங்கும் போதே நெடுஞ்சாலைத்துறை சாலைகளை சீரமைப்பதை நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் ஏற்கனவே மோசமான சாலைகள், தொடர்மழையினால் படு மோசமானவையாக மாறிவிட்டன. கடலுார் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலை பெயர்ந்து பெரிய பள்ளங்களாக உள்ளன.
குறிப்பாக கிராம சாலைகள் பரவலாக குண்டும் குழியாக சீர் கெட்டு காணப்படுகின்றன. மாநகராட்சியை பொருத்தவரை புல்லக்கடை சந்து பகுதியில் சாலைகள் அடியோடு பெயர்ந்துள்ளன. இதனால் வாகனங்கள் செல்லவே சிரமாக உள்ளது.
கடலுார் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் சாலையில், பெரிய பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த சாலையில் பஸ் போக்குவரத்து 24 மணிநேரமும் இருப்பதால், ஜல்லிகள் பெயர்ந்துள்ளன.
புதுப்பாளையம் சஞ்சீவராயன் கோவில் தெருவில் சிமென்ட் சாலை பழுதடைந்துள்ளது. குண்டுஉப்பலாவடியில் என்.ஜி.ஓ., நகர், பத்மாவதி நகர் ஆகிய இடங்களில் சாலைகளின் சுவடுகளே இல்லை.
அதேபோல முதுநகரில் ஏராளமான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளைத்தெருவில், சிவன்கோவில் அருகே சாலை பெயர்ந்து பெரிய பள்ளங்களாக காட்சி தருகின்றன.
இதேபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் கிராம சாலைகள் முழுவதும் சீர்கெட்டுள்ளன. உதாரணமாக கடலுார்- புதுச்சேரி சாலையில், பெரிய கங்கணாங்குப்பத்தில் இருந்து உச்சிமேடு செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக உள்ள சாலை மட்டும் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் 2 கி.மீ., சாலை மட்டும் போடாமல் உள்ளது.
இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

