ADDED : ஏப் 05, 2025 07:57 AM

கடலுார்: கடலுார் அருகே பல்வேறு வழக்கில் தொடர்புடைய சகோதரர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகன்கள் நிரபு,35; தீரன்,30. இருவரும் கடந்த மார்ச் 5ம் தேதி, கீழ்பூவாணிகுப்பத்தைச் சேர்ந்த பாரதி மற்றும் அவரது கணவரை தாக்கினர்.
மாந்தோப்பு கிராமம் வேலாயுதம்,45; ஆலப்பாக்கம் ஸ்டீபன்ராஜ் என்பவரையும் தாக்கினர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து, 2 பேரையும் தேடி வந்தனர்.
இருவரும் சி.முட்லுார் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், புதுச்சத்திரம் சப்இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் கைது செய்ய முயன்றார். இருவரும் சப்இன்ஸ்பெக்டரை திட்டி, கொலைமிரட்டல் விடுத்தனர். கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
இருவரும் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி லிஸ்ட்டில் உள்ளனர். நிரபு மீது கொலை முயற்சி, கொடிய ஆயுதம் வைத்திருத்தல், வழிப்பறி, வெடிபொருள் வைத்திருத்தல், சாராயம் என 20 வழக்கு உள்ளன. தீரன் மீது கொலைமுயற்சி, கலவரம் செய்தல் என 8 வழக்குகள் உள்ளன.
இருவரின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.

