/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலட்டாற்றில் தடுப்பணை சபா ராஜேந்திரன் கோரிக்கை
/
மலட்டாற்றில் தடுப்பணை சபா ராஜேந்திரன் கோரிக்கை
ADDED : டிச 11, 2024 05:37 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட காமாட்சிப்பேட்டையில் தென் மலட்டாற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என, சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில் அவர் பேசியது:
பெஞ்சல் புயல் காரணமாக கடலுார் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின். துணை முதல்வர் உதயநிதி சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மீட்புபணிகளை நேரில் பார்வையிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கடலுார் மாவட்டம் 7 மாவட்டங்களின் வடிகால் பகுதியாக உள்ளதால் அடிக்கடி பேரிடர் பாதிப்பு நிகழ்கிறது. எனவே, மாவட்டத்திற்கென சிறப்பு திட்டங்களை தீட்டி, ஆற்றின் கொள்ளளவை உயர்த்தும் வகையில் ஆற்றின் இருபுறமும் கரைகளை உயர்த்தி பலப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, தென்பெண்ணையாற்றில் வரும் வெள்ளம், தென் மலட்டாற்றில் புகுந்து நெய்வேலி தொகுதிக்குட்பட்ட திருவாமூர், காமாட்சிப்பேட்டை, எலந்தம்பட்டு, சிறுவத்துார், ஏரிப்பாளையம், செம்மேடு, கருக்கை போன்ற கிராமங்களில் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.
எனவே, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காமாட்சிப்பேட்டையில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

