/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலூர் மாவட்டத்தில் சம்பா மகசூல் குறைந்தது: கூடுதல் விலை கிடப்பதால் விவசாயிகள் ஆறுதல்
/
கடலூர் மாவட்டத்தில் சம்பா மகசூல் குறைந்தது: கூடுதல் விலை கிடப்பதால் விவசாயிகள் ஆறுதல்
கடலூர் மாவட்டத்தில் சம்பா மகசூல் குறைந்தது: கூடுதல் விலை கிடப்பதால் விவசாயிகள் ஆறுதல்
கடலூர் மாவட்டத்தில் சம்பா மகசூல் குறைந்தது: கூடுதல் விலை கிடப்பதால் விவசாயிகள் ஆறுதல்
ADDED : பிப் 01, 2024 06:16 AM
கடலுார்: கடலுார் மாவட்ட டெல்டா பகுதியில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடியில், நெல் மகசூல் வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்த நிலையில், தென்மேற்கு பருவ மழையை நம்பி, கடலுார் மாவட்ட டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு விவசாயிகள் காலதாமதமாக, செப்டம்பர் மாதத்தில் பி.பி.டி., என்.எல்.ஆர், கோ 43, கோ 54 ரக நெல் சம்பா சாகுபடி செய்தனர்.
டெல்டாவில், நேரடி நெல் விதைப்பு மூலம் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் ஒருபோக சம்பா சாகுபடி செய்யப்பட்டன.
போதிய அளவு தென்மேற்கு பருவ மழை இல்லாததால், பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகின. பின்னர், விவசாயிகள் போர்வெல் பாசனம் மூலம் மாற்று பயிர் செய்தனர்.
இதனைதொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழை கை கொடுத்ததால் களை எடுத்தல், உரமிடுதல் பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக நெல்லில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. மருந்து தெளித்து விவசாயிகள் பயிரை காப்பாற்றினர்.
சம்பா சாகுபடிக்கு மராமத்து பணியில் துவங்கி, உழவு, விதை நெல், ஆள் கூலி, உரம், பூச்சி மருந்து என, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையில் சராசரியாக செலவு செய்துள்ளனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், கடந்த 20 நாட்களாக சம்பா நெல் அறுவடை நடந்து வருகிறது. இதுவரையில், 50 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு அறுவடை முடிந்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவில் விளைச்சல் இல்லை.
கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் ஏக்கருக்கு சராசரியாக, 30 முதல் 35 மூட்டைகள் விளைந்த நிலையில், தற்போது, 20 முதல் 25 மூட்டை அளவில் தான் மகசூல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதிக செலவு செய்து சாகுபடி செய்த நிலையில், இந்த ஆண்டு நெல் மகசூல் குறைந்துள்ளதால் டெல்டா பகுதி, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அதே சமயத்தில், இந்த ஆண்டு சன்னரக நெல் விலை கூடுதலாக கிடைப்பது விவசாயிகளுக்கு ஆறுதல் விஷயமாக உள்ளது. பி.பி.டி, கோ 43, 54, போன்ற சன்னரக நெல் 62 கிலோ மூட்டை ரூ.1,650 முதல் ரூ.1,725 தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதனால் விவசாயிகள்
தனியார் வியாபாரிகளிடம் நெல் விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு மகசூல் குறைந்துள்ள நிலையில், நல்ல விலை கிடைப்பதால், பெரிய அளவில் நஷ்டம் இல்லை என, விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.