/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு: 6 தொழிற்சங்கங்கள் மனுத்தாக்கல்
/
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு: 6 தொழிற்சங்கங்கள் மனுத்தாக்கல்
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு: 6 தொழிற்சங்கங்கள் மனுத்தாக்கல்
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு: 6 தொழிற்சங்கங்கள் மனுத்தாக்கல்
ADDED : ஏப் 17, 2025 06:42 AM
நெய்வேலி: என்.எல்.சி.,யில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்வு செய்ய ரகசிய ஓட்டெடுப்புக்கான வேட்பு மனுத்தாக்கல் நடந்தது.
கடலுார் மாவட்டம், என்.எல்.சி.,யில் 6, 578 நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை என்.எல்.சி., நிர்வாகத்தடன் பேச்சுவார்த்தை நடத்தி பெறுவதற்கான சங்கத்தை ரகசிய ஓட்டெடுப்பு வாயிலாக தொழிலாளர்கள் தேர்வு செய்வர்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ரகசிய ஓட்டெடுப்பு வரும் 25ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில், நெய்வேலி மட்டுமின்றி துாத்துக்குடி, ராஜஸ்தான், ஒடிசா, உத்திரபிரதேசத்தில் இயங்கும் என்.எல்.சி.,யின் விரிவாக்கப் பகுதிகள் மட்டுமின்றி, டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா. ஐதராபாத், பெங்களூரு ஆகிய 6 என்.எல்.சி.,யின் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 6,578 பேர் ஓட்டளிக்க உள்ளனர்.
வேட்பு மனுத் தாக்கல் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணிக்கு முடிந்தது. தொழிற்சங்கங்கள் ஆதரவாளர்களுடன் நெய்வேலி நகரை வலம் வந்து மனுத்தாக்கல் செய்ததால் பரபரப்பு நிலவியது.
தேர்தலில் போட்டியிடும் தகுதி 13 சங்கங்களுக்கு உள்ள நிலையில் 6 சங்கத்தினர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தனர். தொ.மு.ச.,-அ.தொ.ஊ.ச.,-பா.தொ.ச.,-பி.எம்.எஸ்.,- சி.ஐ.டி.யூ., -தி.தொ.ஊ.ச., ஆகிய 6 சங்கங்கள் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர்.
அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டதையடுத்து, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை தவிர இதர கட்சியினர் தொ.மு.ச.,வுக்கு ஆதரவு தெரிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்வதை தவிர்த்தனர்.
ஆனால், ஓட்டெடுப்பின் போது தொ.மு.ச.,வுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியை சார்ந்த தொழிலாளர்கள் ஓட்டளிப்பார்களா என்பதில் குழப்பம் நிலவுகிறது. சமீப காலமாக தொழிற்சங்க தேர்தலில் போட்டியிடும் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரிக்கிறது. இத்தேர்தலிலும் பணம் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.
3,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட தொ.மு.ச., அவர்களது உறுப்பினர்களுக்கே பணம் கொடுக்கும் சூழல்தான் நிலவுகிறது. இதே பாணியில் அ.தொ.ஊ.ச., மற்றும் பா.தொ.ச.,வும் பணம் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.
ரகசிய ஓட்டெடுப்பு, வரும் 25ம் தேதி நடக்க உள்ள நிலையில், 51 சதவீத ஓட்டுகள் (3400க்கும் மேற்பட்ட ஓட்டுகள்) பெறப்போகும் ஒன்று அல்லது 2 சங்கங்கள் வெற்றி பெற்று என்.எல்.சி., நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் அங்கீகாரத்தை பெற உள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வர இருக்கும் சட்டசபை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தொழிற்சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி என்.எல்.சி., ஜீவா தொழிற்சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.