/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி விருதையில் மூத்த நிர்வாகிகள் ரகசிய மீட்டிங்
/
பா.ம.க., கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி விருதையில் மூத்த நிர்வாகிகள் ரகசிய மீட்டிங்
பா.ம.க., கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி விருதையில் மூத்த நிர்வாகிகள் ரகசிய மீட்டிங்
பா.ம.க., கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி விருதையில் மூத்த நிர்வாகிகள் ரகசிய மீட்டிங்
ADDED : ஜூன் 18, 2025 05:01 AM
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணி, அவரது ஆதரவாளர்களை அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை ராமதாஸ் எடுத்து வரும் வேளையில், அதற்கு எதிர் நடவடிக்கைகளை அன்புமணி தரப்பும் எடுத்து வருகிறது.
தந்தை, மகனுக்கு இடையே நடக்கும் அதிகார மோதலை தீர்க்க முடியாமல், மூத்த நிர்வாகிகள் பலரும் குழம்பியுள்ளனர். இந்நிலையில், விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயனுக்கு பதிலாக, இளைஞர் சங்க செயலாளர் சுரேஷ் என்பவரை ராமதாஸ் நியமித்தார்.
உடனடியாக, கார்த்திகேயனே மாவட்ட செயலாராக தொடர்வார் என அன்புமணி அறிவித்தார். ஏற்கனவே தந்தையா, மகனா என குழம்பியுள்ள தொண்டர்களுக்கு, மாவட்ட செயலாளராக இருவரை அறிவித்துள்ளது, மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால், மேற்கு மாவட்டத்தில் இருவரது ஆதரவாளர்களும் கோஷ்டியாக செயல்பட துவங்கியதால், பல ஆண்டுகளாக கட்சியை கட்டமைத்த மூத்த நிர்வாகிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, விருத்தாசலம் பூதாமூரில் உள்ள ஆடுகளம் என்ற விளையாட்டு மைதானத்தில், மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்தது.
முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி, மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் தமிழரசி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருஞானம், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
அதில், தந்தை, மகன் மோதல் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்து விடும். ஆனால், ஒரே பகுதியில் உள்ள இரு மாவட்ட செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளை மதிப்பது இல்லை. அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபடுகின்றனர்.
நாளடைவில் அவர்களது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட வாய்ப்புள்ளது. இது, பா.ம.க.,வினர் இடையே பிளவு ஏற்பட்டு, மாற்று கட்சிகளுக்கு சாதகமாக வாய்ப்புள்ளது. எனவே, வரும் 20ம் தேதி கடலுாருக்கு வரும் அன்புமணி ராமதாசை சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும்.
இரு மாவட்ட செயலாளர்கள் என்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக தந்தை, மகன் இணைந்ததும், கோஷ்டி பூசலை தவிர்த்திட நடுநிலையான மூத்த நிர்வாகி ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்க வலியுறுத்துவோம். அதுவரை அமைதியாக கட்சிப் பணியை மேற்கொள்வது என, ஆலோசிக்கப்பட்டது.
தந்தை, மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளியாக மூத்த நிர்வாகிகள் போட்ட ரகசிய மீட்டிங், மாவட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விரைவில் பா.ம.க.,வில் மோதல் முடிவுக்கு வரும்போது, நடுநிலையான நிர்வாகி யாரேனும் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல், மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனத்தால் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.