வெலிங்டன் நீர்த்தேக்க கரை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்!: பருவமழைக்கு முன் முடிக்க விவசாயிகள் கோரிக்கை
வெலிங்டன் நீர்த்தேக்க கரை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்!: பருவமழைக்கு முன் முடிக்க விவசாயிகள் கோரிக்கை
UPDATED : செப் 20, 2026 03:56 PM
ADDED : செப் 20, 2026 03:21 PM
திட்டக்குடி:
ரூ. 130 கோடியில் நடந்து வரும் கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்க புனரமைப்பு பணிகளை வடகிழக்கு பருவ மழைக்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் பிரதான நீர்த்தேக்கமாக வெலிங்டன் உள்ளது. இந்த நீர்த்தேக்கம் 2,580 மில்லியன் கனஅடி நீர்பிடிப்பு கொண்டது. இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பருவமழை மற்றும் கோடை மழை காலங்களில் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் பிடிப்பு செய்து விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவது வழக்கம். ஆனால் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள், பாசனத்திற்கு திறக்கப்படும் மேல் மட்ட மற்றும் கீழ்மட்ட வாய்க்கால்கள், கிளை வாய்க்கால் முறையாக துார்வாரப்படுவதில்லை.
இதனால் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டத்தின் அளவு மட்டுமே 29 அடியை எட்டும். இதனை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அதிகாரிகளும் விழா எடுத்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விடுகின்றனர்.
ஆனால் நீர்த்தேக்கம் மற்றும் வாய்க்கால்கள் சரிவர துார்வாராததால் பல இடங்களில் கரைகள் வலுவிழந்து உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விரயமானது. இதனை நீர்வளத்துறை அதிகாரிகளும் பொக்லைன் மூலம் உடைப்பை சரி செய்வது வழக்கம்.
நீர்த்தேக்கத்தை துார்வாருதல், கரைகள் மற்றும் பாசன வாய்க்கால்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என திட்டக்குடி, விருத்தாசலம் இரு தாலுகா விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்தாண்டு பிப்ரவரியில் கடலுாரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தை புனரமைக்க ரூ. 130 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். கடந்தாண்டு வெலிங்டன் நீர்த்தேக்கம் புனரமைக்க நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியது.
அதில், கரைகள் பலப்படுத்த சீரமைக்க 74 கோடியும், முதன்மை கால்வாய் சீரமைக்க 20 கோடி, உபரி நீர் கால்வாய் சீரமைப்புக்கு 36 கோடி ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி, நடந்து வருகின்றன.
கரைகளை பலப்படுத்த திட்டக்குடி தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட ஏரிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, திடமான மண்ணைக்கொண்டு 75 சதவீதம் கரைகள் பலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இதேபோல், உபரி நீர் செல்லும் 13 கண் மதகுகள், தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. எனவே, விவசாயிகளின் நலன்கருதி புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து நீர்த்தேக்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் கரைகள் பலப்படுத்த தாலுகாவுக்குட்பட்ட ஏரிகளில் இருந்து வண்டல், சவுடு மண் எடுத்து வந்து நீர்த்தேக்கத்தில் சேதமடைந்த கரைகளை புனரமைக்கிறோம். மழை பெய்தால் மண் எடுக்கும் பணிகளில் தடை ஏற்படும். இதனால் நீர்த்தேக்க பணிகளிலும் தொய்வு ஏற்படும். கரை பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்' என்றார்.
