ADDED : ஆக 29, 2026 04:41 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினி வேன் மோதி, சிக்னல் கம்பம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம்–சேலம் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், விருத்தாசலம் நகரில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
ஆனால், சென்டர் மீடியனில் எச்சரிக்கை பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள் இல்லாததால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் செல்லும் வாகனங்கள், சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இதே போல், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக சென்ற டாடா ஏஸ் வேன், சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அந்த வேனின் முன்புறம் சேதமடைந்த நிலையில், டிரைவர் காயமின்றி தப்பினார். இந்த விபத்தில், சென்டர் மீடியனில் பொறுத்தியிருந்த சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. விபத்து குறித்து, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
