விருதை - ராமநத்தம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் :விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு மந்தம்
விருதை - ராமநத்தம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் :விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு மந்தம்
UPDATED : ஜூலை 28, 2026 06:11 PM
ADDED : ஜூலை 28, 2026 06:02 PM
திட்டக்குடி:விருத்தாசலம் - ராமநத்தம் நான்கு வழி சாலை பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மாவட்டத்தில் விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது. இவ்வழியே திருச்சி, கடலுார், சேலம், சென்னை, மதுரை, கோயம்புத்துார், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஏராளமான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.
இச்சாலையில் குறுகிய பாலங்கள், வளைவு சாலைகளால், விருத்தாசலம் - ராமநத்தம் வரையிலான, 42 கி.மீ., துாரத்தை கடந்து செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலானது.
திருச்சி - கடலுார், திட்டக்குடி - சென்னை, திட்டக்குடி - சிதம்பரம் பகுதிகளுக்கான பயண நேரம் அதிகமானதோடு, வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தன.
இச்சாலையில் சந்திக்கும் கடலுார் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இதேபோன்று, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய சாலையாக இருந்த விருத்தாசலம் - ராமநத்தம் சாலை கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 49 கோடியில் 7 மீ., அகலத்திற்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் விபத்துகள் குறைந்தபாடில்லை.
இதற்கிடையே விருத்தாசலம் - ராமநத்தம் சாலையை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில், அகலப்படுத்தப்பட உள்ளதாக, 6 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்த அப்போதைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் துவங்கவில்லை. விபத்துகளும் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.
விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை தடுக்க விருத்தாசலம் - ராமநத்தம் சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்தாண்டு நவம்பரில் விருத்தாசலம் - ராமநத்தம் சாலையை நான்குவழி சாலையாக தரம் உயர்த்த அப்போதைய முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 150 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளும் துவங்கியது.
அதில், முதற்கட்டமாக கடந்தாண்டு, திட்டக்குடி முதல் அரங்கூர் வரை, ரூ. 70 கோடியில் 10 கி.மீ., துாரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
விரிவாக்க பணிக்காக சாலையோர உள்ள புளியமரம், தென்னை, புங்கன் உட்பட, 533 மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, வெட்டி அகற்றப்பட்டு, சாலை, சிறுபாலங்கள் கட்டும் பணிகள் மற்றும் சாலையோர தடுப்புகள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இரண்டாம் கட்டமாக, ரூ. 80 கோடியில் கருவேப்பிலங்குறிச்சி - திட்டக்குடி வரையிலான நான்கு வழி சாலை பணிகள், கடந்த 7 மாதங்களுக்கு முன் துவங்கியது.
அதில், நந்தப்பாடி, பெண்ணாடம், இறையூர், ஆவினங்குடி பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் துவங்கிய நிலையில், சாலையோர பள்ளங்களில் ஜல்லிகள் கொட்டி மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் மூலம் இதுவரை அகற்றாமல் நான்குவழி சாலை விரிவாக்க பணிகள் மந்தமாக நடப்பதால் திட்டக்குடி, ஆவினங்குடி, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
எனவே, மந்தமாக நடந்து வரும் விருத்தாசலம் - தொழுதுார் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
