சபாநாயகம் கோவில் சொத்து ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சபாநாயகம் கோவில் சொத்து ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ADDED : ஆக 08, 2026 04:54 AM
கடலுார்: தினமலர் செய்தி எதிரொலியால், சபாநாயகம் கோவிலுக்கு சொந்தமான சொத்தின் குத்தகை ஏலம் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம், சபாநாயகம் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு, கடலுார் பஸ் நிலையம் அடுத்த ரயில்வே மேம்பாலம் அருகே, 3 ஏக்கர் நிலம் உள்ளது.
பஸ் நிலையம் அருகே கேட்பாரற்று இருந்த இடத்தை ஆக்கிரமித்து பட்டா வாங்கிக் கொள்ள சிலர் முயற்சித்தனர். அதனை உண்மை என பலர் பணம் செலவழித்து வந்தனர். இடத்தை கைப்பற்ற பல அரசியல் கட்சியினரும் முயற்சித்து வந்தனர்.
இதனை அறிந்த ஹிந்து அறநிலையத்துறை, நிலத்தை குத்தகைக்கு விட முடிவு செய்து, இதற்கான ஏலம் நேற்று முன்தினம் கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் என நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து 'தினமலரில்' செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் நிலத்தை பார்வையிட்டனர்.
இதுகுறித்து தாசில்தார் ரத்தினகுமார் கூறுகையில், 'இந்த நிலம் பஸ் நிலையம் அருகில் இருப்பதால் இனி இங்கு விவசாயம் செய்ய முடியாது. மேலும், நிலத்தை சுற்றி கட்டடங்கள் உயர்ந்துவிட்டதால் 'கமர்ஷியல்' பகுதியாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சத்திற்கு மேல் ஏலம் போகக்கூடிய சொத்தை சென்னையில் உள்ள கமிஷ்னர் தலைமையில்தான் ஏலம் விட வேண்டும். அதனால் நடைபெற இருந்த ஏலம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.
