/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் சுகாதார நிலையம் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு! அடிக்கடி ஆய்வு செய்தும் நடவடிக்கை இல்லை
/
ஸ்ரீமுஷ்ணம் சுகாதார நிலையம் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு! அடிக்கடி ஆய்வு செய்தும் நடவடிக்கை இல்லை
ஸ்ரீமுஷ்ணம் சுகாதார நிலையம் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு! அடிக்கடி ஆய்வு செய்தும் நடவடிக்கை இல்லை
ஸ்ரீமுஷ்ணம் சுகாதார நிலையம் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு! அடிக்கடி ஆய்வு செய்தும் நடவடிக்கை இல்லை
ADDED : அக் 14, 2024 11:23 PM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் நுாறாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அவசர கால சிகிச்சைக்கு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கிராம பகுதிகளை உள்ளடக்கிய ஸ்ரீமுஷ்ணத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 1916 ம்ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு, நுாறாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள சேத்தியாதோப்பு, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது, 30 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்துவரும் இங்கு, உயிர் காக்கும் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் அவசர சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும் விபத்து காலங்களில் அவசர சிகிச்சை, விஷக்கடி மருந்துகள், எலும்பு முறிவு மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் இல்லை, இதனால், விபத்து மற்றும் விஷ கடி உள்ளிட்ட அவசர கால சிகிச்சைக்கு விருத்தாசலம், சிதம்பரம் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் உடனடி சிகிச்கசை கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் வசதி இங்கு இல்லை. இதனால் மூச்சுத்திணறலால் வரும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் சிகிச்சையளிக்க தனியார் டாக்டர்கள் கூட இல்லாத நிலையில், அவசர கால சிகிச்சைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது.
ஒரு சில நேரங்களில், இங்கு டாக்டர்களும் இரவு பணியில் இல்லாததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவசர கால சிகிச்சைக்கு வெளியூர் செல்ல முடியாத நிலையில் பாதிக்கின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் தற்போது, தனி தாலுகாவாகவும், ஒன்றியமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது, நகருக்கு வரும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, ஸ்ரீமுஷ்ணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அவசர சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் யூனிட் ஒன்று அமைக்கவேண்டும் என, மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறை கோரிக்கை வைக்கும்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஆய்வு செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால், இதுவரையில் தரம் உயரவில்லை. எனவே,
கிராமப்புற மக்களுக்கு அனைத்து விதமான அவசர சிகிச்சைகளும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.