
கடலுார்: கடலுாரில் திடீரென பெய்த மழையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடலுார் மாவட்டத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை நேற்று புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். கடலுாரில் காலை 10:30 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழந்தது. திடீரென சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. 11:00 மணி வரை பெய்த மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பிரதான சாலைகளில் தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். திடீர் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். தீபாவளி நோன்பு பொருட்கள் விற்பனை கடைகள், இறைச்சி கடைகளில் சிறிது நேரம் வியாபாரம் பாதித்தது. 11:30 மணிக்கு பிறகு மீண்டும் வெயில் தலைகாட்டியதால் வழக்கல் போல் விற்பனை விறு விறுப்பாக நடந்தது.