/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் நிறுவனம் வெள்ளை அறிக்கை வெளியிட பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
/
டாஸ்மாக் நிறுவனம் வெள்ளை அறிக்கை வெளியிட பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
டாஸ்மாக் நிறுவனம் வெள்ளை அறிக்கை வெளியிட பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
டாஸ்மாக் நிறுவனம் வெள்ளை அறிக்கை வெளியிட பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2025 10:54 PM
கடலுார் டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு- செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
கடலுாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எதற்காக சோதனை நடத்தினர் என்ற விவரம் பணியாளர்களுக்கு தெரியாது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் குறைபாடுகளுக்கும், டாஸ்மாக் பணியாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இவர்கள் நுகர்வோர்களோடு தொடர்புடைய விஷயங்களுக்கு மட்டுமே பொறுப்பாவார்கள். கடந்த 2003ம் ஆண்டுக்கு முன் 3,000 கோடி ரூபாய், 4,000 கோடி ரூபாய் என ஆண்டுதோறும் அரசுக்கு லாபமாக வந்த டாஸ்மாக் நிறுவனத்தில் தற்போது 50,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை ஏற்க முடியாது. டாஸ்மாக் பணியாளர்கள் குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். எனவே, டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு- செலவுகள் குறித்தும், லாபத்தில் எவ்வளவு சதவீதம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநிலத் தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் இஷ்டலிங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் இருதயராஜ் உடனிருந்தனர்.