ADDED : ஜூன் 29, 2025 03:22 AM
திட்டக்குடி : திட்டக்குடியில் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அடுத்த பள்ள காளிங்கராயநல்லுாரைச் சேர்ந்தவர் தனசீலன் மகன் ஜீவா, 25; இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு சொந்த வேலை காரணமாக மனைவி பாரதியுடன் பைக்கில் திட்டக்குடி வந்தார்.
பின்னர் மனைவியை திட்டக்குடி பஸ் ஸ்டாண்டில் நிற்க சொல்லிவிட்டு தர்மகுடிக்காடு பெட்ரோல் பங்கிற்கு செல்வதாகக் கூறி, திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் சென்றார். அப்போது, வசிஷ்டபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டி.என். 61 - ஏ.பி. 3857 பதிவெண் கொண்ட கார் பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.