/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடுத்தடுத்து தலைவர்கள் வருகையால் தேர்தல் களம்... சூடுபிடித்தது; கடலுார் மாவட்டத்தில் கட்சித் தொண்டர்கள் உற்சாகம்
/
அடுத்தடுத்து தலைவர்கள் வருகையால் தேர்தல் களம்... சூடுபிடித்தது; கடலுார் மாவட்டத்தில் கட்சித் தொண்டர்கள் உற்சாகம்
அடுத்தடுத்து தலைவர்கள் வருகையால் தேர்தல் களம்... சூடுபிடித்தது; கடலுார் மாவட்டத்தில் கட்சித் தொண்டர்கள் உற்சாகம்
அடுத்தடுத்து தலைவர்கள் வருகையால் தேர்தல் களம்... சூடுபிடித்தது; கடலுார் மாவட்டத்தில் கட்சித் தொண்டர்கள் உற்சாகம்
ADDED : ஏப் 01, 2024 04:14 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்தடுத்து கட்சித் தலைவர்கள் படையெடுத்து பிரசாரம் செய்வதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டம் தோறும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம் என 2 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., விஷ்ணு பிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சியில் மணிவாசகன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 19 பேர் களத்தில் உள்ளனர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ஜ.,வில் கார்த்தியாயினி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 14 பேர் களத்தில் உள்ளனர்.
கடலுார் மற்றும் சிதம்பரம் தொகுதியில் பகுதி வாரியாக வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த 29ம் தேதி விருத்தாசலம் மற்றும் குள்ளஞ்சாவடியில் தேர்தல் பிரசாரம் செய்தார். கடலுார் முதுநகரில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்தும், சிதம்பரத்தில் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்தும் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று முன் தினம் பிரசாரம் செய்தார்.
இதே போன்று, கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
சிதம்பரத்தில் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவனையும், கடலுாரில் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தையும் ஆதரித்து அமைச்சர் உதயநிதி நேற்று, பிரசாரம் செய்தார். அடுத்த கட்டமாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சிதம்பரத்தில் வரும் 5ம் தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
கடந்த 28ம் தேதிக்கு முன் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்காத நிலையில் பிரதான கட்சி தொண்டர்கள் உற்சாகமின்றி இருந்தனர். கட்சி அலுவலகங்களும் தொண்டர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளதால் கடலுார் மாவட்டத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கட்சித் தலைவர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும், பேச்சாளர்களும் அடுத்தடுத்து படையெடுத்து வருகின்றனர்.
தலைவர்கள் பிரசாரத்திற்காக கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இப்படி தலைவர்கள் வருகை, ஓட்டு சேகரிப்பு என, மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

