/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வழங்கும் நிதி பத்தல... பத்தல... ; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புலம்பலோ புலம்பல்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வழங்கும் நிதி பத்தல... பத்தல... ; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புலம்பலோ புலம்பல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வழங்கும் நிதி பத்தல... பத்தல... ; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புலம்பலோ புலம்பல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வழங்கும் நிதி பத்தல... பத்தல... ; ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புலம்பலோ புலம்பல்
ADDED : ஆக 26, 2025 11:39 PM

தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகர, ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையின் கீழ் நடக்கும் இத்திட்டம் ஊரக வளர்ச்சித்துறையிடம் வழங்கப்பட்டது.
ஆதார், ரேஷன், சமூக நலன், மின்சாரம், நிலஅளவை, தொழிலாளர் நலன், சுகாதாரம், கால்நடை உட்பட 15 துறைகளைச் சேர்ந்த கோட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் இரண்டு, மூன்று, நான்கு ஊராட்சிகளை இணைத்து, அனைவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் முகாம் நடத்தப்படுகிறது.
இதற்காக பந்தல், மின்விளக்கு, பயனாளிகள் அமர இருக்கை, ஸ்பீக்கர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டோருக்கு காலை, மதிய உணவு என வழங்கப்படுகிறது. இதற்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
கடந்தாண்டில், 'மக்களுடன் முதல்வர் திட்டம்' சிறப்பு முகாம் நடந்தபோது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவி வகித்தனர். அவர்களிடம் ஊராட்சிக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்து, செலவுகளை எளிதாக சமாளித்தனர்.
ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறை இருந்தபோதும், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் சிலர் சொந்த பணத்தை கொடுத்து உதவினர்.
ஆனால், தற்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்து, ஊராட்சி செயலாளர்கள் மூலம் பி.டி.ஓ.,க்கள் கண்காணிப்பில் உள்ளதால், நிதி பற்றாக்குறை உள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாத நிலையில், ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறைந்த அளவே கிடைக்கிறது என தமிழக அரசு புலம்பி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களுக்கு ஊராட்சிகளில் போதுமான நிதி இல்லாததால், வாடகைக்கு வரும் பொருட்களுக்கு உடனுக்குடன் பட்டுவாடா செய்ய முடியவில்லை.
மேலும், ஊராட்சிகளில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வீடுகள் கட்டும் திட்டம் போன்ற வழக்கமான பணிகளை கவனிக்க முடியாமல் மாதந்தோறும் சிறப்பு முகாமிற்கு சென்று மனுக்களை பெறுவதால் பணிகளும் பாதிக்கிறது.
இதற்கு பதிலாக, ஜமாபந்தி, கிராம சபை கூட்டங்களில் பெறும் மனுக்களுக்கு முறையாக தீர்வு காணப்பட்டால், அடுத்தடுத்த சிறப்பு முகாம்களுக்கு தேவை இருக்காது என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.