/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரு என்னுடையது... போட்டோ யாருடையது
/
பேரு என்னுடையது... போட்டோ யாருடையது
ADDED : மார் 19, 2025 04:42 AM

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 44; இவரது மனைவி துர்காதேவி, 32. முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவி. இவர் கடந்த 2022ல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்து காத்திருந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் செம்பேரியில் இதற்கான சிறப்பு முகாம் நடந்தது. அதில், மீண்டும் பதிவு செய்வதற்கு துர்காதேவி சென்றார். அப்போது, அங்கிருந்த ஊழியர் ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ளதாகவும், யூஆர்என் எனப்படும் 22 இலக்க எண் ஒன்றை பேப்பரில் எழுதிக் கொடுத்தார்.
அதனை எடுத்துக் கொண்டு, பெண்ணாடத்தில் உள்ள தனியார் இ-சேவை மையத்திற்கு சென்று, காப்பீடு திட்ட அட்டையை பதிவிறக்கம் செய்தபோது, துர்காதேவி என்ற பெயர் சரியாக இருந்தது.
ஆனால், புகைப்படம் 4 ஆண்டிற்கு முன் இறந்த அதேபகுதியை சேர்ந்த தங்கராசு மனைவி பஞ்சவர்ணம் மற்றும் கணவரை இழந்த அவரது மகள் வாலாம்பாள் ஆகியோரின் படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, துர்காதேவியின் கணவர் ஆறுமுகம் கூறுகையில், 'எனது குடும்பத்திற்கான காப்பீடு அட்டை நேற்று பகல் பதிவிறக்கம் செய்தேன். அதில், எங்கள் குடும்ப புகைப்படம் இருப்பதற்கு பதிலாக இறந்தவரின் குடும்ப புகைப்படம் உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்து, தாசில்தாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்' என்றார்.