ADDED : அக் 27, 2024 05:09 AM
புவனகிரி : புவனகிரி பேரூராட்சியில் இரு இடங்களில் 15 வது நிதி குழு மானியத்தில் துவங்கிய சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் பணிகள், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட ஏ.எஸ்.ஆர்., நகர் மற்றும் லட்சுமி கார்டனில் தலா ஒரு ஏக்கரில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் நடை பயிற்சி பாதை உள்ளிட்டவை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் 15 வது மானிய நிதி குழுவில் தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது.
இரு இடங்களிலும் துவங்கிய பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் காடுபோல் முட்புதற்கள் மண்டியுள்ளது. சாலை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் விஷ ஜந்துகளின் புகலிடமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கும் குழந்தைகளின் விளையாட்டை ஊக்கப்படுத்த அரசு ஏற்படுத்திய முயற்சி தோல்வி அடைந்து உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விரைந்து, பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கேசவன் என்பவர், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மனு அளித்துள்ளார்.