/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் மலை காய்கறிகள் விலை ... கிடு கிடு; சாமானிய மக்கள் கடும் அவதி
/
மாவட்டத்தில் மலை காய்கறிகள் விலை ... கிடு கிடு; சாமானிய மக்கள் கடும் அவதி
மாவட்டத்தில் மலை காய்கறிகள் விலை ... கிடு கிடு; சாமானிய மக்கள் கடும் அவதி
மாவட்டத்தில் மலை காய்கறிகள் விலை ... கிடு கிடு; சாமானிய மக்கள் கடும் அவதி
ADDED : ஆக 19, 2025 07:37 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் தவித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் உள்ளூர் காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் விளைகின்றன. இந்த காய்கறிகள் எல்லாம் மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில் விளைச்சல் துவங்கும்.
ஆனால், அப்போது கத்தரிக்காய் ஒரு கிலோ வெறும் 5 ரூபாயாக இருக்கும். வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள் எல்லாம் கிலோ 15 ரூபாயாக விற்பனையாகின. கத்தரிக்காய் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளால் தொடர்ந்து செடியை களை எடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளில் ஈடுபட முடியவில்லை.
உற்பத்தி செலவைவிட குறைந்த விலைக்கு 3 மாதங்களாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் கத்தரி செடியை பராமரிக்காமல் ஏர் உழுது நவரை பட்டத்தில் நெல் நடவு செய்து விட்டனர். இதனால் கத்தரி பரப்பளவு கனிசமாக குறைந்தது.
அதேப் போன்று, பூசணிக்காய், சுரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறி செடிகளும் பராமரிக்காமல் விட்டு விட்டனர். மேலும் அவ்வப்போது பருவம் தவறிய கன மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் ஓரளவு பரப்பளவு குறைந்த கத்தரிக்காய் விலை கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேப் போன்று, மலைக்காய்கறிகள் கிடுகிடு என உயர்ந்து விட்டன. எப்போதுமே கிலோ 10, 12 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி 40 ரூபாயாகவும், கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் 63 ரூபாயாகவும், 40 ரூபாய்க்கு விற்பனையான உருளைக்கிழங்கு 70 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையான கேரட் 45 ரூபாய்க்கும், பீட்ரூட் 25 ரூபாயில் இருந்து 35 ரூபாய்க்கும், கரணைக் கிழங்கு 60 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைவால் இந்த விலை உயர்வு என வியாபாரிகள் கூறி வருகின்றனர்.
உள்ளூரில் விளையக்கூடிய கொத்தவரங்காய், வெண்டைக்காய் கிலோ 30 ரூபாய் அளவில் உள்ளன. அவரைக்காய் 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காய்கறி விலைக்கு போட்டியாக மளிகைப்பொருட்களும் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனால், சாமானிய மக்கள் குடும்பம் நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. இல்லத்தரசிகள் சமையல் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.