/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டா மாற்றத்திற்கு வசூல் புலம்பும் பொதுமக்கள்
/
பட்டா மாற்றத்திற்கு வசூல் புலம்பும் பொதுமக்கள்
ADDED : ஜன 08, 2025 05:28 AM
மாவட்டத்தின் கடைக்கோடி தாலுகாவில், பட்டாமாற்றம் என்றாலே பொதுமக்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்துவிட்டு, அதிகாரிகள் கேட்கும் தொகையை தரவில்லை என்றால் ஏதாவது காரணம் கூறி நிராகரித்து விடுவதாகவும், இடத்திலுள்ள பிரச்னையை பொறுத்து மீட்டரும் எகிறுவதாக தெரிவிக்கின்றனர். 50ஆயிரம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் டிமாண்ட் செய்யும் அதிகாரிகள், கேட்கும் பணத்தை கொடுப்பவர்களுக்கு உடனடியாக விதிகளையெல்லாம் மீறி சேவை செய்கின்றனர்.
பணம் இல்லாதவர்களுக்கு அப்பா, தாத்தா பெயரில் உள்ள பட்டாவை பெயர் மாற்றம் செய்யவே ஆறு மாதம், ஓராண்டு என அலைக்கழிக்கின்றனர்.
அதிலும் சில வி.ஏ.ஓ.,க்கள், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஊரில் உள்ள பொதுமக்களிடம் கூட நான் செய்து தருகிறேன் எனக்கூறி பணத்தை வாங்குவதாக தெரிகிறது.
பணத்தையாவது திரும்ப கொடுங்கள் என கேட்டால் அரசியல்வாதிகள் பெயரை சொல்லி தப்பிக்க பார்க்கின்றனர். இதற்கென ஒவ்வொரு ஊரிலும் வி.ஏ.ஓ.,க்களுக்கு புரோக்கர்களை வைத்துள்ளனர்.
அரசியல்வாதிகள் தலையீடும் இருப்பதால் உயர் அதிகாரிகள் செயல்படாத பொம்மைகளாகஇருக்க வேண்டிய நிலை உள்ளது.