/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொளார் ஒன்றியம் அமைக்க வலுக்கிறது கோரிக்கை
/
தொளார் ஒன்றியம் அமைக்க வலுக்கிறது கோரிக்கை
ADDED : ஜன 13, 2024 04:11 AM

தொளார் கிராமத்தை மையமாகக் கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என, முன்னாள் ஊராட்சி வார்டுஉறுப்பினர் வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான நல்லுார் ஒன்றியத்தில் 64 ஊராட்சிகள் உள்ளது.
பெரிய ஒன்றியமான நல்லுார் ஒன்றியத்தின் தெற்கு பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் குடிநீர், சுகாதார வசதி, சாலைவசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல், தன்னிறைவு பெறாத கிராமங்களாக உள்ளன.
ஒன்றிய தலைமையிடமான நல்லுாருக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் இரண்டு பஸ்கள் மாறிச்சென்று அதிகாரிகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதிகாரிகள் இல்லாதபட்சத்தில் பல நாட்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதிக கிராமங்கள் உள்ளதால், பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாமலும், கிராமங்களை கண்காணிக்க முடியாமலும், நிர்வகிக்க முடியாமலும் அதிகாரிகள் திணறுகின்றனர்.
எனவே, தொளார் ஊராட்சியை மையமாகக் கொண்டு அருகிலுள்ள கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, மேலுார், மருதத்துார், ஆதமங்கலம், அருகேரி, எரப்பாவூர் உள்ளிட்ட 30 கிராமங்களை ஒருங்கிணைத்து புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து முன்னாள் ஊராட்சி வார்டுஉறுப்பினர் தொ.செங்கமேடு வெங்கட்ராமன் கூறுகையில், 'நல்லுார் ஒன்றியத்தில் தெற்கு பகுதியில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனி ஒன்றியமாக மாற்றினால், அரசு நிதி ஒதுக்கி பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
தெற்கு பகுதியில் இருந்து ஒன்றிய தலைமையிடம் 40 கி.மீ.,தொலைவில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது. தொளார் ஊராட்சியை மையமாகக் கொண்டு புதிய ஒன்றியம் அமைத்தால், தெற்கு பகுதி கிராமங்கள் தன்னிறைவு பெறும்' என்றார்.