/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாசன வாய்க்கால்கள் துார்வாரும் பணி துவங்கியது! மாவட்டத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு
/
பாசன வாய்க்கால்கள் துார்வாரும் பணி துவங்கியது! மாவட்டத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு
பாசன வாய்க்கால்கள் துார்வாரும் பணி துவங்கியது! மாவட்டத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு
பாசன வாய்க்கால்கள் துார்வாரும் பணி துவங்கியது! மாவட்டத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு
ADDED : மே 08, 2024 11:57 PM

கடலுார் மாவட்ட காவிரி டெல்டா பகுதி பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை, கலெக்டர் அதிரடி ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. காவிரி கடைமடை பகுதியாக இருப்பதால், ஆண்டு தோறும் காவிரி நீரை நம்பியே பெருமளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதற்கேற்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாசன வாய்க்கால்கள் துார்வாரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, கடலுார் மாவட்ட காவிரி கடைமடை பகுதியில், துார்வாரும் பணி துவங்கியுள்ளது.
மாவட்டத்தில் 14 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 84 இடங்களில் மொத்தம் 733 கிலோ மீட்டர் துாரம் வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள், வீராணம் ஏரி பாசன வாய்க்கால், வாலாஜா ஏரி பாசன வாய்க்கால்கள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் துார்வாரப்படுகிறது. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியிலும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவிரி டெல்டா கடைமடை பாசன பகுதியில் துார்வாரும் பணியை, கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே பின்னலுார், அம்பாள்புரம், உடையூர் வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்கால், வத்தராயன்தெத்து வாய்க்கால், பூதங்குடி, வெய்யலுார், கலியமலை, பூலாமேடு, லால்புரம், தில்லைவிடங்கன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடம் துார்வாரும் பணியில் நிறைகுறைகளை கேட்டறிந்தார்.
பொதுப்பணித்துறை, கொள்ளிடம் வடிநில கோட்ட அதிகாரிகளிடம் துார்வாரும் பணியை முற்றிலுமாக தரமாக செய்ய வேண்டும் என்றும், பாசன வாய்க்கால்கள் கிளை வாய்க்கால்களையும் புதர்களை அகற்றி சுத்தமாக துார்வாருமாறு தெரிவித்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
அப்போது கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், சரவணன், கொளஞ்சி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன உதவி பொறியாளர் படைகாத்தான் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வின்போது உடனிருந்தனர்.
-நமது நிருபர்-