/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தெப்போற்சவம்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தெப்போற்சவம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தெப்போற்சவம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தெப்போற்சவம்
ADDED : ஜன 03, 2025 07:19 AM

சிதம்பரம்; சிதம்பரம் ஞானப்பிரகாச குளத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, நடராஜர் கோவில் தரிசன விழா தெப்போற்சவம் நடைபெற உள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம் என ஆண்டுக்கு இருமுறை தரிசன விழா விமர்சையாக நடக்கிறது.
தரிசன நிறைவு நாளன்று, கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாச குளத்தில் தெற்போற்சவம் நடைபெறும். ஆனால், குளம் துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால், கடந்த 30 ஆண்டுகளாக அங்கு தெப்போற்சவம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் செந்தில்குமார் கோரிக்கையின் பேரில், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, சிதம்பரத்தில் உள்ள குளங்களை சீரமைக்க ரூ. 15 கோடி நிதி ஒதுக்கினார்.
அந்த நிதியில், ரூ. 3 கோடி செலவில் ஞானப்பிரகாச குளத்தை துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு, சுற்றிலும் மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. குளத்தின் நடுவில், இடிந்த நிலையில் இருந்த நீராழி மண்டபம், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இந்த ஆண்டு மார்கழி ஆருத்ர தரிசன விழா நாளை (4ம் தேதி) துவங்க உள்ள நிலையில், நிறைவு நாளான 15ம் தேதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.