/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதுகளால் சாதிக்கும் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி
/
விருதுகளால் சாதிக்கும் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி
விருதுகளால் சாதிக்கும் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி
விருதுகளால் சாதிக்கும் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி
ADDED : ஆக 16, 2025 11:44 PM

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் அரசு நடுநிலைப்பள்ளியானது, கடந்த 2011ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் நகராட்சி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 344 மாணவர்கள், 163 மாணவிகள் என மொத்தம் 507 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் 18 பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் பள்ளியில் காற்றோட்டமான, விசாலமான வகுப்பறை கட்டடங்கள், உள் அ ரங்கு மற்றும் விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதாரமான சத்துணவு கூட்டம், உயர்தர கணினி ஆய்வகம், நேர்த்தியான நுாலகம், அறிவியல் ஆய்வகம், மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை வசதி என, தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை இப்பள்ளி பெற்றுள்ளது.
மாணவர்களின் பன்முகத்திறமையை வெளிக்கொணர்தல் காரணமாக நாளுக்கு நாள் சுற்றுப்புற கிராமப்புற நம்பிக்கையை பெற்று மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு 183 மாணவர்கள் மட்டுமே படித்தனர். 2018ல் 303 ஆகவும், நடப்பாண்டில் 507 ஆகவும் அதிகரித்துள்ளது.
பள்ளி பெற்ற விருதுகள் சிறப்பான செயல்பாடுகளால் அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்ற இப்பள்ளி கடந்த 2019ம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம்; கற்பிப்போம் செயல்பாட்டிற்காக சிறந்த பள்ளிக்கான விருது பெற்றது.
2024ம் ஆண்டு சிறந்த பள்ளி மேலாண்மைக்குழு விருதும் பெற்றுள்ளது. மாணவர் கோகுல்நாத், 2025ம் ஆண்டு கடலுார் வந்த முதல்வர் ஸ்டாலினை ஓவியமாக வரைந்து அவருக்கு பரிசளித்து வாழ்த்து பெற்றார். 2023ம் ஆண்டில் ஓவியப்போட்டியில் வென்ற மாணவர் புவனேஸ்வரனை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டினார்.
கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவிகள் ரக் ஷிதா, ரிதன்யா, ஸ்ரீமதிமலர் ஆகியோரை அமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டினார்.
மாணவர்களின் சாதனைகள் 2021ல் பள்ளி மாணவர் இசைக்கலைஞன் வரைந்த ஓவியம் தமிழக அரசு நாட்காட்டியில் இடம் பெற்று சாதனை படைத்தது. கலைத் திருவிழாவில் மாணவர் சிவ ராமனின் நாட்டுப்புற பாடல், மாணவர் அருண்குமாரின் கைவினைப் பொருள் செய்தல், மாணவி சீதாலட்சுமியின் தனிநடிப்பு பாராட்டு பெற்றது. சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சச்சின், அபிராமி, தேசிகா, தரணிதரன் ஆகியோரின் சாதனை ஆஸ்கார் உலக சாதனை நிறுவனத்திடம் பாராட்டு பெற்றது. திருக்குறள் ஒப்புவித்தலில் மாணவி பிரார்த்தனா, மூன்று நிமிடத்தில் 60 குறள்கள் ஒப்புவித்து ஜேக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
2018ம் ஆண்டு உலக மீன்வள தின கட்டுரைப் போட்டியில் மாணவர் ஜெகதீஷ் முதலிடம், 2019ல் போதை ஒழிப்பு குறித்த கட்டுரைப்போட்டியில் மாணவி கவிதா முதலிடம், 2021ல் கொரோனா பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டியில் மாணவர் இசைக்கலைஞன் முதலிடம், 2022ல் போதை ஒழிப்பு குறித்த கவிதைப் போட்டியில் மாணவி தேவதர்ஷினி முதலிடம் பிடித்தனர்.
2023ல் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த கட்டுரைப்போட்டியில் மாணவி ஸ்ரீமதிமலர், கட்டுரைப்போட்டியில் மாணவி கோபிகா, பேச்சுப்போட்டியில் மாணவி சீதாலட்சுமி முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வள்ளலார் அறக்கட்டளை சார்பில் நடந்த கட்டுரைப்போட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பேச்சுப்போட்டிகளில் மாணவி ஸ்ரீமதிமலர், கேலோ இந்தியா ஓவியப் போட்டியில் மாணவர் புவனேஸ்வரன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
2024ல் எதிர்கால கனவை வரைதல் போட்டியில் மாணவர் புவனேஸ்வரன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
மேலும் 2023ல் நடந்த அறிவியல் ஆய்வு தேர்வில் மாணவிகள் ஸ்ரீமதிமலர், சுவேதா ஆகியோரும், கடலுார் கடல்சார் ஆய்வியல்துறை சார்பில் நடந்த போட்டியில் மாணவர்கள் ஹரிபிரசாத், கிர்த்தீஷ், வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி போட்டியில் பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்களும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற போட்டியில் மாணவர்கள் சந்துரு, சுகுணா பங்கேற்றனர்.
விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 2021ல் நடந்த மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகளில் மாணவி வளர்மதி முதலிடம் பெற்றார். 2022ல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, 2024ல் நடந்த குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள், 2025ல் நடந்த குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள், எறிபந்து போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
ஆசிரியர் பெற்ற விருதுகள் மாணவர்களுக்கு இணையாக ஆசிரியர்களும் பல்வேறு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 2008-09ல் வட்டார வள மையம் சார்பில் வழங்கப்பட்ட சிகரம் தொட்ட ஆசிரியர்கள் விருதை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், செல்வி பெற்றனர்.
2019ல் ஆசிரியை மேரி வளர்மதி ஜோஸ்பினுக் கு, கோவை தனியார் கல்லுாரியில் நடந்த விழாவில் புரட்சியாளர் விருது வழங்கப்பட்டது. 2010-11ல் ஆசிரியை சுசித்ராவுக்கு, அரிமா சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருதும், 2018-19ல் தமிழ்நாடு யோகா பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் ஆரோக்கிய சுந்தர்ராஜிற்கு யோக கலைமா மணி விருதும், 2024ல் ஆசிரியை ஷோபனாவிற்கு அரிமா சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் தேவநாதன், கடந்த 2018ம் ஆண்டு இப்பள்ளியில் பொறுப்பேற்றார். 2019ம் ஆண்டு கோவையில் நடந்த விழாவில் புரட்சியாளர் விருது பெற்றார். 2022ம் ஆண்டு அமைச்சர் அன்பில் மகேஷிடம் மாநில நல்லாசிரியர் விருது பெற்றார்.
2024ல் தேசிய கட்டமைப்பு விருதும், 2025ல் திறம்பட பணிபுரியும் சிறந்த தலைமை ஆசிரியர் விருதும் பெற்றார். 2025ல் தமிழ்நாடு அரசின் பேராசிரியர் அன்பழகனார் விருது, அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு 30 ஆண்டுகள் கல்வித்துறையின் அனுபவம் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இப்பள்ளியில் பொறுப்பேற்ற பின் ஆசிரியர், மாணவர் நல்லுறவை பேணிக்காப்பதில் கவனம் செலுத்தினேன். இதனால் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவித்து மாநில, மாவட்ட அளவில் பரிசு பெற வாய்ப்பாக அமைந்தது.
இதன் காரணமாக பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து, கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் உருவானது. அதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான பயிற்சி அளித்து, சிறந்த மதிப்பெண் பெற்று பொதுத்தேர் வில் தேர்ச்சி பெற்றோம். கல்பாக்கம் அனல்மின் நிலையத்தின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாணவர் ராஜேந்திரன் குடும்பத்தினர் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு கட்டடம் கட்டித் தந்தனர். மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டடம் கிடைத்தது.
தற்போது பள்ளிக்கல்வித் துறை மூலம் 1.40 கோடி மதிப்பில் 8 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பொதுமக்களின் ஆதரவும் பள்ளியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதில் பெரும் உதவியாக உள்ளது.
தேவநாதன், தலைமை ஆசிரியர்.
தரமான அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறை வசதி கூட முறையாக இல்லாமல் இருந்தது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சுகாதாரமான கழிவறை என பள்ளியின் அடிப்படை வசதிகள் தரமாக உள்ளது.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டினால் மாணவர்கள் கல்வியிலும், தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சுபாஷினி, தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு.
மாணவர் நலனில் அக்கறை இங்கு தான் பயின்றேன். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, கல்வியில் ஆர்வத்தை உண்டாக்குகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் ஆசிரியர்களால் எங்கள் பள்ளி சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.
பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர்.