/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் திட்டக்குடி விவசாயிகள் கவலை
/
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் திட்டக்குடி விவசாயிகள் கவலை
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் திட்டக்குடி விவசாயிகள் கவலை
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் திட்டக்குடி விவசாயிகள் கவலை
ADDED : மே 20, 2025 06:50 AM

திட்டக்குடி : திட்டக்குடி பகுதியில் பெய்த திடீர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது.
திட்டக்குடி அடுத்த அருகேரி, எரப்பாவூர், தொளார், இறையூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கடந்த மார்ச் மாதம் குறுவை நெல் நடவு சாகுபடி செய்தனர். தற்போது, நெற்கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல கிராம பகுதிகளில் சாகுபடி செய்துள்ள குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன.
மழைநீர் தேங்கி நிற்பதால் நெற்கதிர்களில் முளைப்புத்திறன் ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், இயந்திரம் மூலம் அறுவடை பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 'வயல் ஓரங்களில் இருந்த நெல் பயிரை அறுத்து அறுவடை பணிக்கு தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் இயந்திரம் தட்டுப்பாடு காரணமாக நெல் அறுவடை பணிகளை துவங்க முடியவில்லை. திடீரென பெய்த கனமழைக்கு நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி, மகசூல் பாதிக்கும் சூழல் உள்ளது' என்றார்.
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லுார், சாந்தி நகர், மழவராயநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி நெல் நடவு செய்துள்ளனர். இங்கு தொடர் மழை காரணமாக வயல்கள் முழுதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பாசன வாய்க்கால் ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் உள்ளதால், வெள்ளக் காலங்களில் பயிர்கள் பாதிப்பது தொடர் கதையாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.