/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 13, 2025 06:32 AM

சிதம்பரம் : உலக புகழ் பெற்ற, சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. சித்சபையில் இருந்து மூலவர்கள் நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி, உற்சவர்கள் சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் காலை 7.00 மணிக்கு எழுந்தருளினர். கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'வா வா நடராஜா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று கீழவீதி தேர்நிலையை அடைந்தன. வீதிகளில் பக்தர்கள் மண்டகப்படி செய்து சுவாமியை வழிபட்டனர்.
இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனம், தெய்வத் தமிழ்ப்பேரவை சேர்ந்த சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர். ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தினர். சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சிவன், பார்வதி வேடமணிந்து சிவவாத்தியங்கள் முழங்க, சிவநடனமாடினர்.
மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயம் சார்பில நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சீர்அளித்து, பட்டு சாத்தி தீபாராதனை செய்தனர்.
தேர் நிலையை அடைந்த பின், நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இன்று (13ம் தேதி) ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15ம் தேதி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். எஸ்.பி., ஜெயக்குமார், சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தலைமையில், நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.